தேவாலயத்தை மூடிக்கொண்டு இருந்த பாதிரியார் மர்ம நபரால் சுடப்பட்டது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
பிரான்சில் உள்ள Lyon பகுதியில் அமைந்திருக்கும் தேவாலயத்தை பாதிரியார் ஒருவர் மூடிக்கொண்டிருந்தார். அப்போது அவ்விடத்திற்கு மர்ம நபர் ஒருவர் வந்து பாதிரியார் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றார். இதனால் வயிற்றில் காயமடைந்த பாதிரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். காவல் அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் வைத்திருந்தது வேட்டையாடும் துப்பாக்கி என்றும் அந்த நபர் தனியாக வந்ததும் தெரியவந்துள்ளது.
மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருவதால் துப்பாக்கிச்சூடு நடந்த பகுதிக்கு பொதுமக்கள் அதிகம் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரான்சில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். அதேபோன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று போலீசாரே ஒருவர் கத்தியால் தாக்க முயற்சித்துள்ளார். இதனிடையே உள்துறை அமைச்சரான ஜெரால்ட் டர்மனின், பிரான்ஸ் மண்ணில் இன்னும் பல தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.