2020ல் இந்தியா வல்லரசாகும் என்ற APJஅப்துல் கலாமின் கனவை தவிடுபொடியாக்கும் விதமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சினிமா, அரசியல் போன்ற துறைகளில் தங்களது திறமையை காட்டுபவர்கள் லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களுக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்வார்கள். ஆனால் இதுபோன்ற எந்தவொரு பெரிய பின்புலமும் இல்லாமல், தனக்கென குறிப்பாக இளைஞர்கள் அதிகம் கொண்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த ஒரே பெருமை டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களையே சேரும்.
அவரது மிகப்பெரிய ஆசை இந்தியா 2020 ஆம் ஆண்டில் வல்லரசு ஆகும். அதற்கு இந்தியாவின் மாணவர்களும், இளைஞர்களும் மிகப்பெரிய தூண்களாக, ஊன்றுகோலாக இருப்பார்கள் என்பதுதான். ஆனால், அவரது கனவை பாழாக்கும் விதமாக இன்றைய காலகட்ட இளைஞர்களும், மாணவர்களும் செயல்படுவது வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. அதாவது, ஸ்மார்ட் போனில் கேம் விளையாடுவோர் எண்ணிக்கை குறித்து 24 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், முதல் பத்து நாடுகளில் இந்தியா உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவின் கேமிங் மக்கள் தொகையில், 82 சதவீதம் பேர் வாரத்திற்கு 10 மணி நேரம் வரை ஸ்மார்ட்போனில் விளையாடுகிறார்கள். இதில் 16 சதவீதம் பேர் மட்டுமே தீவிரமாக விளையாடுபவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் வாழும் இந்தியர்களில் பத்தில் ஏழு பேர் மொபைல் கேம்களில் மூழ்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
உலக நாடுகளில் பல புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து வரும் சூழ்நிலையில், இந்தியா இளைஞர் என்ற பெரிய வளங்களை மிகப்பெரிய எண்ணிக்கையில் கொண்ட நாடு. எனவே மாணவர்களும், இளைஞர்களும் இதுபோன்ற தேவையற்ற செயல்களில் ஆர்வத்தை காட்டுவதை தவிர்க்கும் விதமாக, அவர்களுக்கு பல விஷயங்களில் வாய்ப்பளித்தும், பல புதிய தொழில்நுட்பங்களை கற்பித்தும் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல மத்திய அரசு கட்டாயம் முடிவெடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.