திருநெல்வேலியில் வழக்கறிஞரை தாக்கிய ஹோட்டல் உரிமையாளர்கள் இரண்டு பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை முருகன் குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தேநீர் அருந்த வந்தார். அப்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹோட்டல் ஊழியர்களும் உரிமையாளரும் திடீரென அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் தாக்கப்பட்டதாக செய்தி பரவியதால் அவருக்கு ஆதரவாக அங்கு திரண்ட வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வழக்கறிஞர்கள் வலியுறுத்தியதால் காவல்துறையினர் ஹோட்டல் உரிமையாளர்கள் இரண்டு பேர் உட்பட 7 பேரை கைது செய்தனர். தாக்கப்பட்ட வழக்கறிஞர் ஏற்கனவே அந்த ஹோட்டல் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2 முறை நஷ்ட ஈடு வாங்கியதால் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.