பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு சிவசேனா கட்சியும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளது.
பீகார் மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிட்டது. அதில் தேர்தலில் வெற்றி பெற்றால் பீகார் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி கிடைக்கச் செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் இத்தகைய அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். காங்கிரஸ் போன்ற கட்சிகளை தொடர்ந்து தற்போது சிவசேனா கட்சியும் இதனை கடுமையாக சாடி உள்ளது.
தடுப்பூசி இன்னும் வரவே இல்லை என்றும், அதற்குள் பாஜகவின் தேர்தல் கால வார்த்தை ஜாலங்களில் தடுப்பூசி இடம்பெற்று விட்டதாகவும் சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி விமர்சித்தார். எல்லா மாநில மக்களையும் சமமாக பார்ப்பது மத்திய அரசின் கடமை இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர் இந்த வாக்குறுதி பீகாருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி நிதி தொகுப்பு அளிப்பதாக கொடுத்த வாக்குறுதி போன்றதா என்றும் பிரியங்கா சதுர்வேதி கடுமையாக விமர்சித்துள்ளார்.