புதிதாக பிரியாணி கடை திறந்த திருநங்கை பத்து வருடங்களுக்கு முன்பு நடந்தது போல் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் திருநங்கைகள் சங்கத்தின் தலைவராக இருந்து வந்தவர் சங்கீதா இவர் பல வருடங்களாக பிரியாணி விற்பனை செய்து வந்தார். கடந்த மாதம் ஆர்எஸ் புரத்தில் புதிதாக ட்ரான்ஸ் கிட்சேன் பிரியாணி என்ற கடையை ஆரம்பித்தார். அதோடு அதில் 10 திருநங்கைகளுக்கு வேலையும் கொடுத்தார். புதிதாக தொடங்கப்பட்ட இந்த ஹோட்டலுக்கு மக்களின் வரவேற்பும் ஆதரவும் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் சங்கீதா நேற்று சாய்பாபா காலனியில் இருக்கும் அவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து திருநங்கைகள் கொலை செய்தவரை கண்டு பிடிக்கவில்லை என்றால் போராட்டம் செய்வோம் என காவல் ஆணையரிடம் தெரிவித்தனர். அதோடு பிரியாணி விற்பதில் ஏற்பட்ட போட்டிதான் சங்கீதா கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்றும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பத்து வருடங்களுக்கு முன்பு உக்கடம் பகுதியில் அனிபா என்ற திருநங்கை பிரியாணி விற்பனை செய்து வந்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது சங்கீதா கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.