ஹரியானா மாநிலத்தில் தனது கணவரால், பெண் ஒருவர் கழிவறைக்குள் ஒரு வருடமாக பூட்டி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பானிபட் மாவட்டம் ரிஷ்பூர் என்ற கிராமத்தில் தனது கணவரால் பெண் ஒருவர் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் பூட்டி வைக்கப்பட்டுள்ளார். அது பற்றி அறிந்த பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடை அதிகாரி ரஜினி குப்தா அந்தப் பெண்ணை தனது மீட்பு குழுவினருடன் சேர்ந்து மீட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ” பெண் ஒருவர் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறையில் பூட்டி வைக்கப்பட்டு இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் எனது குழுவுடன் சேர்ந்து நான் அங்கு விரைந்து சென்றேன்.
அங்கு சென்று பார்த்தபோது, அது உண்மை என்று நாங்கள் கண்டறிந்தோம். அந்தப் பெண் பல நாட்களாக எதையும் சாப்பிடவில்லை. அதுமட்டுமன்றி அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறினார்கள். ஆனால் அது உண்மை அல்ல. நாங்கள் அந்தப் பெண்ணுடன் பேசும்போது அவர் நல்ல நிலையில் தான் இருந்தார். அந்தப் பெண்ணை பாதுகாப்பாக மீட்டு அவரின் தலை முடியை கழுவினோம். தற்போது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்”என்று அவர் கூறியுள்ளார்.