காரைக்குடி நெடுஞ்சாலை சோதனைச்சாவடி அருகே டாஸ்மார்க் அமைத்த அமைக்க இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அறந்தாங்கி நகரம் காரைக்குடி நெடுஞ்சாலை சோதனைச்சாவடி அருகே புதிதாக மதுபானக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்க்கு உடனடியாக தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு ஆளும் கட்சி தேர்தல் வாக்குறுதியாக 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கூறியிருந்தது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? 2016 ஆம் ஆண்டு எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன ? 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன ? தற்பொழுது எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன ? அதன் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு ? என்பது குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள். மேலும் காரைக்குடி நெடுஞ்சாலை சோதனைச்சாவடி அருகே டாஸ்மாக் கடை அமைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.