திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடங்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் வாகன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை மறுநாள் தொடங்க உள்ளது. 24 ஆம் தேதி வரை நடைபெறும் விழா நாட்களில், தினம் தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், திருமஞ்சனம் ஆகியவை நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவில் மாட வீதிகளில் நடைபெறும் வாகன சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் மட்டும் வாகன சேவை நடைபெறும்.
இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த ஒன்றாம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாடவீதிகளில் வாகன சேவை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி மாடவீதிகளில் வாகன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ நிகழ்ச்சியின்போது 300 ரூபாய் சிறப்பு தரிசனம், ஸ்ரீவாரி டிரஸ்ட் பக்தர்கள் மற்றும் விஐபி பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.