வடகொரியாவிடம் இருந்து தப்பிக்க ஜப்பான் தனது ஏவுகணை தடுப்பு திறனை வலுப்படுத்த போவதாக கூறியுள்ளது.
வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதனைத்தொடர்ந்து அதிசக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது. எப்போதும் தனது ஏவுகணை மற்றும் ஆயுத பலத்தை வெளிப்படுத்தும் வகையில் தான் வடகொரியா ராணுவ அணிவகுப்பை நடத்தும். இந்நிலையில் தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இது குறித்து கவலை தெரிவித்துள்ளன.
அதேநேரம் ஜப்பான் வடகொரியாவின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, தங்கள் நாட்டு ஏவுகணை தடுப்பு திறனை வலுப்படுத்த போவதாக கூறியுள்ளது. டோக்கியோவில் செய்தியாளர்களை சந்தித்த ஜப்பான் அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் கூறுகையில், “வடகொரியா அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய ஏவுகணையை வழக்கமான உபகரணங்களால் சமாளிக்க முடியாது என்பதை நாங்கள் புரிந்து கொள்கின்றோம். அதே நேரம் சிக்கலான சூழலுக்கு பதிலளிக்க புது வியூகம் அமைக்கும் விதமாக எங்கள் ஏவுகணை தடுப்பு திறனை வலுப்படுத்துவதற்கு நாங்கள் உறுதியுடன் செயல்படுவோம்” என கூறியுள்ளார்.