முத்தலாக் தடை சட்டம் இயற்றியதால் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற ராஜமாதா சிந்தியாவின் பார்வை நாட்டை முன்னெடுத்துச் சென்றது என மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவின் தாயார் மற்றும் மூத்த அரசியல்வாதி ராஜமாதா விஜயராஜே நூற்றாண்டு பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவாக மத்திய நிதி அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.அதன்படி மெய்நிகர் நிகழ்ச்சி வழியாக நாணயம் வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறுகையில், “ராஜமாதா சிந்தியா அவரின் முழு வாழ்க்கையையும் ஏழை மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டார். அதிகாரம் முக்கியம் அல்ல மக்களின் சேவையே முக்கியம் என அவர் மக்கள் பிரதிநிதிகளுக்கு நிறுவனம் செய்துள்ளார்.
முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டம் இயற்றி அதன் மூலமாக, பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற ராஜமாதா சிந்தியாவின் பார்வையை நாடு முன்னெடுத்துச் சென்றது”என்று அவர் கூறியுள்ளார். மூன்று முறை தலாக் கூறி உடனடி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்தது. அதனால் முத்தலாக் மூலமாக விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டு சிறை வழங்க அந்த சட்டம் வழிவகுத்தது. இந்த புதிய சட்டத்தின் மூலமாக தற்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.