வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தையடுத்து தமிழ்நாடு பருவமழையை சந்திப்பதற்கு எல்லா வகைகளிலும் தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை 47% மழைநீர் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கின்றது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கவிருக்கும் நிலையில் பருவ மழைக்கான எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையேற்ற இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்பட்ட புயல்களின் காரணமாக தமிழகத்தில் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டன.எனவே இந்த ஆண்டு தமிழக அரசு முன்னதாகவே எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை தொடர்பு கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு எல்லா வகையிலும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் புயல் வீசி மரங்கள் கீழே விழுந்தாலும் அவற்றை அகற்ற உபகரணங்கள் தயாராக உள்ளதாகவும்,மேலும் பருவமழையை எதிர்கொள்ள 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாடு அறை அமைக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.