கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே நெய்வேலி சுரங்கப் பகுதியில் வெளியேறிய நீரில் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. நெய்வேலி பகுதிகளில் பெய்த மழை காரணமாக நெய்வேலி இரண்டாவது சுரங்க பகுதியில் மண்மேடுகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அருகில் உள்ள கிராமங்களில் விளைநிலங்களில் தேங்கியது. இதனால் அப்பகுதி நெல்வயல்கள் 50 ஏக்கருக்கு மேல் நீரில் மூழ்கியது.
நெய்வேலி சுரங்கம் மண் மேடுகளில் இருந்து வரும் மழை நீரினால் மழைக்காலங்களில் இந்த பாதிப்பு தொடர்ந்து ஏற்படுகிறது என்றும் குறிப்பாக கொளபாக்கம், கம்மாபுரம், கீரனூர் பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என்றும் இதற்கு தீர்வுகாண கடலூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.