உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த 19 வயது இளம்பெண் மரணம் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது சிறுமி தாக்கூர் சமூகத்தை சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அதன்பிறகு நாக்கு துண்டாகி, முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்தப் பெண்ணின் உடல் போலீசாரால் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென மக்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இளைஞர்களில் முதன்மை குற்றவாளியாக கருதப்படுகின்ற சந்தீப் சிங் என்பவர் காவல்துறை எஸ்.பி க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “நாங்கள் நான்கு பேரும் அப்பாவிகள். உயிரிழந்த பெண் எனக்கு நெருங்கிய தோழி. நாங்கள் இருவரும் பேசுவது அந்த பெண்ணின் குடும்பத்துக்கு பிடிக்காத காரணத்தால் அவரை துன்புறுத்தி கடுமையாக தாக்கினார்கள். அதனால் அவர் உயிரிழந்தார்”என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறுகையில், “நாங்கள் ஏற்கனவே வேதனையில் இருக்கிறோம். எங்களின் குழந்தையை நாங்கள் இழந்து விட்டோம். இப்போது எங்களை அவமதிக்கிறார்கள். எங்களுக்கு கட்டாயம் நீதி வேண்டும். இழப்பீடு எதுவும் எங்களுக்கு தேவை இல்லை. அவர்களுடன் எங்களுக்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது” என்று கூறியுள்ளனர்.