கேன் நீர் குடிக்கும் சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மெட்ரோ நகரங்களான சென்னை,கோயம்புத்தூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பெரும்பாலும் கேன் வாட்டர்களையே நம்பியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள், குடிநீர் கேன்கள், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் 187 மாதிரிகளை சென்னை மாநகராட்சி ஆய்வுக்கு அனுப்பியது.
இதில், 40 மாதிரிகள் குடிப்பதற்கு தரமற்றவை என்றும், 30 மாதிரிகளில் பாக்டீரியா இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவரங்களை மாநகராட்சி தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்துள்ளது. அத்தியாவசியமாக கருதப்படும் குடிநீர் தரமற்றதாக இருப்பது சென்னை வாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.