ஆன்லைன் பகுப்பில் பங்கேற்க மலைக்குன்றுக்கு சென்ற மாணவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குஜராத் மாநிலத்தில் இருக்கும் தாப்பி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் கோவிந்த். இவர் கிராமத்தில் இருக்கும் மலைக்குன்றில் வைத்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இணைய வசதி அங்கு சரியாக கிடைப்பதனால் அவர் மற்றும் அவரது நண்பர் அந்த இடத்தை தேர்ந்தெடுத்தனர். இருவரும் வகுப்பில் பங்கேற்று கொண்டிருந்தபோது திடீரென சிறுத்தை ஒன்று அவர்கள் எதிரே வந்துள்ளது. சிறுத்தையிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்குள் கோவிந்த் சிறுத்தையால் தாக்கப்பட்டார்
இதனைத் தொடர்ந்து அவரது நண்பன் கிராமத்தினரை அழைக்க விரைந்து சென்றார். சிறுத்தை கோவிந்தின் கை மற்றும் கால்களை கவ்வி பிடிக்க மாணவர் தொடர்ந்து போராடியுள்ளார். அதன்பிறகு கிராமத்தினர் வரும் சத்தம் கேட்டு சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்து கோவிந்த் கூறுகையில், “நானும் எனது நண்பனும் சிறுத்தையை முதலில் பார்த்ததும் பயம் கொண்டோம். நான் கிராமத்தினரை அழைத்து வர அவனிடம் சொல்லி அனுப்பினேன். சிறுத்தையை எதிர் கொண்டு நிற்காமல் திரும்பி ஓடி இருந்தால் அது என் மீது பாய்ந்து என் உயிரை எடுத்திருக்கும் .
என் இடது கையை அது கவ்விய போது அதனிடம் இருந்து விடுபடுவதற்கு என்னால் முடிந்தவரை போராடினேன். ஆனால் கையில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறியது. தக்க சமயத்தில் கிராமமக்கள் வந்ததால் நான் உயிர் பிழைத்தேன்” என கூறியுள்ளார். தாலுகாவை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் சிறுத்தையை பிடிப்பதற்கு 2 கூண்டுகள் வைத்துள்ளோம். கிராமத்தை சுற்றிலும் அடர்ந்த காடாக இருப்பதால் சிறுத்தை இங்கு வருவது சகஜமான ஒன்று என கூறியுள்ளனர். இணையவசதி கிராமத்தில் கிடைக்காததால் தான் இந்த சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கும் கிராம பஞ்சாயத்து தலைவர் மக்களை சிறுத்தையிடம் இருந்து பாதுகாப்பதற்கு இளைஞர்கள் கொண்ட தனிக்குழு அமைத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.