இலங்கையில் ஆறு இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 102 பேர் பலியாகி , 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டத்தையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் திரண்டு பிராத்தனையில் இருந்தனர். காலை 8.30 மணி இருக்கும் போது கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் என பிரார்த்தனை நடைபெற்று கொண்டு இருக்கும்போது திடீரென சக்தி வாய்ந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது.
இதில் தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடித்த சத்தம் கேட்டதும் பொதுமக்கள் நாலாபுறம் சிதறி ஓடினார்கள். இதேபோல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதையறிந்த தீயணைப்பு வீரர்களும் , போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 3 தேவாலயம், 3 நட்சத்திர ஓட்டல்கள் என அடுத்தடுத்து 6 இடங்களில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பத்தில் உயிரிழந்தவர்களின் எணிக்கை 102_ஆக அதிகரித்துள்ளது.மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பத்தால் கொழும்பில் பதட்டம் நீடிக்கின்றது. இலங்கை நகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு இதுவரை எந்தஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு நாட்டின் தலைவர்கள் கண்டனமும் , அனுதாபமும் தெரிவித்துள்ளனர்.