ஜேஇஇ நுழைவுத் தேர்வின் இரண்டாவது கட்ட அட்வான்ஸ் தேர்வை 96 சதவீத மாணவ மாணவிகள் எழுதியுள்ளதாக டெல்லி ஐஐடி கூறியுள்ளது.
நாடு முழுவதிலும் இருக்கின்ற இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.அந்த வகையில் நடத்தப்படும் தேர்வே முதன்மைத் தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு அனுமதிக்கப்படுவர். இந்த வருடத்திற்கான ஜேஇஇ முதன்மை தேர்வு இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நடந்தது. அந்த தேர்வை நாடு முழுவதும் 15,04,000 பேர் எழுதினர்.
அதற்கான தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியாகியது.அந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுதுவதற்கு தகுதி அடைத்துள்ளனர். அவ்வகையில் அட்வான்ஸ் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்து முடிந்தது. நாடு முழுவதிலும் உள்ள 222 நகரங்களில் ஆயிரம் மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுதுவதற்கு 1,60,000மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் கொரோனா அச்சத்திற்கு மத்தியில் 96% பேர் தேர்வை வெற்றிகரமாக எழுதியுள்ளனர் என டெல்லி ஐஐடி கூறியுள்ளது.