வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக முதல்வரை முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி சார்பில் வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்தார். அதில், பேசிய ஸ்டாலின், நாடு முழுவதும் வேளாண் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து போராடக் கூடியவர்களை நாங்கள் கைது செய்யவே மாட்டோம் என்று பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அறிவிகத்திருக்கின்றார்.
அதேபோல டெல்லியில் நடைபெறக்கூடிய போராட்டத்துக்கு ஆளும் கட்சி ஆம் ஆத்மி கட்சி துணை நிற்போம், நாங்களும் ஆதரவு தருகிறோம் என்று அறிவித்தது இருக்கின்றது. தமிழ்நாட்டில் ஒருவர் இருக்கிறார். எடுபிடியாக, கூனிக்குறுகி, மண் புழு போல் வளைந்து வளைந்து நெளிந்து நெளிந்து சென்று இன்று பதவி பெற்று முதலமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
வெட்கமில்லாமல், கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல், இந்த சட்டத்தை ஆதரித்து பாராளுமன்றத்தில் பேசி இருக்கின்றார்கள். இரண்டு அவையிலும் இதை ஆதரித்து, இந்த சட்டம் நிறைவேறுவதற்கு பக்கபலமாக இருந்து இருக்கக் கூடியவர்கள். இதே எடப்பாடி இந்த சட்டத்தை நிறைவேற்றிய உடனே நான் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன். இது நியாயமா ? என்று கேள்வி கேட்டேன்.
இதை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்று தெளிவாக எடுத்துச் சொன்னேன். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொன்னார் ? இதை ஆதரித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அவர் மட்டுமா வேளாண்துறை அமைச்சராக இருக்கக் கூடிய மாண்புமிகு துரைக்கண்ணு அவர்களும் ஆதரித்து விளக்கம் தருகிறார். அவர் மட்டுமா ? அந்த துறையின் உடைய அதிகாரி… அவரை மிரட்டி, அச்சுறுத்தி அவரும் பத்திரிக்கையாளர்களை அழைத்து பேட்டி கொடுக்கிறார்.
எடப்பாடி அடிக்கடி தன்னை விவசாயி, விவசாயி என்று சொல்கிறாரோ… விவசாயி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றி கொண்டிருக்கின்ற விஷவாயு தான் எடப்பாடி பழனிச்சாமி என்பதை நான் இங்கே அழுத்தமாகக் குறிப்பிடுகின்றேன் என்று தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்தார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற முக.ஸ்டாலின் வயக்காட்டில் விவசாயம் சென்று கொண்டு இருந்தவர்களை சந்தித்து பேசினார். அப்போது தனது வேஷ்டியை மடித்துக்காட்டிக்கொண்டு வயக்காட்டில் இறங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.