Categories
தேசிய செய்திகள்

போதைப்பொருள் விவகாரம் – தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராகிறார்..!!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் போதைப்பொருள் தொடர்பான விசாரணைக்கு இன்று  ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில் மும்பையில் நடிகையின் வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பையில் மர்மங்கள் நிறைந்த பின்னணியில் மரணமடைந்தது தொடர்பாக அவரது தோழி நடிகை ரியா சக்கரபோர்த்தி  மீது மத்திய புலனாய்வுத்துறை, சிபிஐ, அமலாக்கப்பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, என்சிபி ஆகியன தனித்தனியே வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்சிபி வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் தொடர்ந்து புலன் விசாரணை நடத்திய அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் அவருக்கு பெரும் பங்கு இருப்பதாக கூறி நடிகையை கைது செய்தனர்.

மும்பை பிக்கூலா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் போதை பொருட்களை பயன்படுத்த நடிகை ரியா தூண்டினார் என்றும் அவருக்கு போதை பொருட்களை ஏற்பாடு செய்து கொடுத்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல ஹிந்தி மற்றும் தெலுங்கு நடிகைகளான தீபிகா படுகோன், சாரா அலிகான், சாரதா கபூர், ரகுல் பிரீத் சிங் ஆகியோரும் போதைப் பொருள் பயன்படுத்துவது  மற்றும் விற்பனையில் சம்பந்தப்பட்டிருப்பதாக என்சிபி விசாரணையின்போது நடிகை ரியா சக்கரபோர்த்தி தெரிவித்திருந்தார்.

இதன் பேரில் இந்த நடிகைகள் 4 பேரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகை தீபிகா படுகோன் போதைப்பொருள் விசாரணைக்காக மும்பையில் என்சிபி அதிகாரிகள் முன்னிலையில் இன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால் கோவா சென்றுள்ள அவர் அவசர அவசரமாக நேற்று இரவு மும்பை திரும்பினார். பரபரப்பான இந்த சூழ்நிலையில் தீபிகாவின் ஆடம்பர வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை கும்பலில் மொபைல் போன் தகவல் பரிமாற்றங்களில் டி என்ற குறியீட்டு எழுத்துடன் கூடிய பெயர் அதிகம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தீபிகாவிடம் என்சிபி அதிகாரிகள் இன்று நடக்கும் விசாரணை மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |