சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் சீர்காழியை சேர்ந்தவர் சித்ரா. சில நாட்களுக்கு முன் வீட்டு வாசலில் கோலம் போடும் போது இவரை மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 9 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே சித்ராவின் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் பிருந்தா என்பவருடன் சையது ரியாசுதீன் என்பவர் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.
இதனால் சந்தேகத்தின் பேரில் பிருந்தா மற்றும் ரியாசுதீன் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிருந்தாவும், ரியாசுதீணும் கடந்த 2014-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தது தெரிய வந்தது. 2016 ஆம் ஆண்டு பிருந்தாவுக்கு வேறு ஒரு ஆணுடன் திருமணம் ஆனப்பின் இந்த காதல் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
பிருந்தாவின் கணவர் சிங்கப்பூரில் வேலை செய்வதால் சித்ராவின் வீட்டு மாடியில் அவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனால் கால நேரமின்றி பிரிந்தவுடன் செல்போனில் கொஞ்சி குலாவிய ரியாசுதீன் அடிக்கடி அவரது வீட்டுக்குச் சென்று தனிமையில் இனிமை கண்டுள்ளார். கள்ளக்காதலர்களின் அத்துமீறிய போக்கு தெரியவந்ததால் பிரிந்தா வீட்டுக்கு ரியாசுதீன் வருவதை கண்டித்து உள்ளார் வீட்டு உரிமையாளரான சித்திரா.
இதனால் ஆத்திரமடைந்த ரியாசுதீன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சித்ராவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார். இதற்காக அவர் இரண்டு முறை ஒத்திகை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18ம் நாள் அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சித்ராவை பின்னால் ஒளிந்திருந்து இரும்பு பைப் கொண்டு தாக்கி ரியாசுதீன் கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு பைப் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் கள்ள காதலர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலை கண்டித்த ஒரே காரணத்தால் ஒரு பாவமும் அறியாத பெண் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.