பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான், சுரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். சுஷாந்த் மரணம் தொடர்பாக அவரது முன்னாள் காதலி நடிகை ரியா சக்கரபோர்த்தி மீது மத்திய புலனாய்வுத்துறை சிபிஐ அமலாக்கப்பிரிவு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியது தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடிகை ரியாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருள் பயன்படுத்துவது மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மேலும் பல பிரபலங்களின் பெயர்கள் வெளிவந்தன. இந்நிலையில் பிரபல ஹிந்தி மற்றும் தெலுங்கு நடிகைகளான தீபிகா படுகோனே, சாரா அலி கான், ரகுள் பிரீட் சிங், சுரதா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதன்படி அடுத்த மூன்று நாட்களில் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பிரபல இந்தி பட இயக்குனர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற போதைப்பொருள் விருந்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட வீடியோ அண்மையில் வெளியானது. இது தொடர்பான புகாரின்பேரில் அந்த வீடியோவை ஆய்வு செய்து வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆடம்பர விருந்தில் பங்கேற்றவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.