பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் போதைப் பொருளை வாங்குவதற்கு அவருக்கு நெருக்கமானவர்களை பயன்படுத்தியதாகவும் நடிகை ரியா சக்ரபர்த்தி குற்றம் சாட்டுகிறார்கள்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியது மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ரியா சக்ரபர்த்தியை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடிகை ரியாவின் சகோதரர் ஷோயிக்கும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகை ரியா சக்ரபர்த்தியின் நீதிமன்ற காவல் வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் ஆகியோர் ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியதாக ரியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் நடிகர் சுஷாந்த் போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும் அவரிடம் பணிபுரிந்தவர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பலரையும் போதைப்பொருளை வாங்குவதற்காக பயன்படுத்திக் கொண்டதாகவும் ரியா ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுக்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்தது. கனமழை காரணமாக மும்பை உயர்நீதி மன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜாமின் மனுக்கள் நாளை விசாரணைக்கு வர உள்ளன.