Categories
அரசியல் மாநில செய்திகள்

144 உத்தரவு முதலமைச்சருக்குப் பொருந்தாதா? – டிடிவி தினகரன் கடும் கண்டனம்..!!

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவை மதிக்காமல் முதலமைச்சரே ஊருக்கு ஊர் கூட்டம் கூட்டி விழா நடத்துவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டி டி வி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டி டி வி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 5 பேருக்கும் மேல் பொது இடத்தில் கூட கூடாது என்று சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு தமக்கு பொருந்தாது என்ற நினைப்பில் முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து நடந்து கொள்வது கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் வீரியம் இன்னும் குறையாத நிலையில் சென்னை பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்பு விழா என்ற பெயரில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கூத்துகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. திட்டமிட்டு ஆட்களை கூட்டி வந்து சமூக இடைவெளி இன்றி அவர்களை நிற்க வைத்து வரவேற்பு என்ற பெயரில் அரசு பிறப்பித்து இருக்கும் அத்தனை நோய் தடுப்பு விதிமுறைகளை மீறும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இதேபோன்றுதான் சமீபத்தில் திருவள்ளூரில் நடைபெற்ற முதலமைச்சரின் நிகழ்ச்சியிலும் நடந்து கொண்டார்கள் என்று திரு டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். அரசின் விதிகளை முதலமைச்சரே மதிக்காமல் அரசு விழாவை நடத்தினால் மற்றவர்கள் எப்படி அதனை மதிப்பார்கள். அதிமுக தொண்டர்களை பற்றி முதலமைச்சர் பழனிச்சாமிக்கு அக்கறை இல்லாமல் போனாலும் அப்பாவி மக்களுக்கு நோய் பரவுவதற்கு அவரே காரணமாக இருப்பது குற்றமில்லையா என திரு டி டி வி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேடைக்கு மேடை தனிமனித இடைவெளி அவசியம் அவசியம் அவசியமின்றி யாரும் வெளியே வரவேண்டாம். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரோனாவை ஒலிக்க முடியும் என்றெல்லாம் வசனம் பேசி வரும் முதலமைச்சர் அவ்வாறு மக்கள் கூட கூடாது என 144 தடைச் சட்டம் போட்ட முதலமைச்சர். தானே பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதோடு தான் செல்லும் இடமெல்லாம் மக்களை திரட்டி வைப்பது ஏன் என டிடிவி தினகரன் வினவியுள்ளார்.

கொரோனா  பரவலுக்கு பொது மக்கள்தான் காரணம் என சித்தரிக்கும் முதலமைச்சர் அதற்கு நேர்மாறாக தானே செயல்படுவது எப்படி சரியாக இருக்க முடியும். சட்ட திட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும் தானா  நமக்குப் பொருந்தாது என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? மேம்பாலம் திறப்பு போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் காணொளி காட்சி வழியாக நடத்தி விட முடியாதா? படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பது போலல்லவா இருக்கிறது, பழனிசாமியின் இந்த செயல்பாடு என திரு டி டி வி தினகரன் விமர்சித்துள்ளார்.

மாவட்டத்திற்கு மாவட்டம் இந்த கொடுமை போதாதென்று முதலமைச்சர் பழனிசாமி செல்லும் இடமெல்லாம் மணிக்கணக்கில் போக்குவரத்தை நிறுத்தி வைத்து ஏற்கனவே கொரோனாவால் நொந்து போயிருக்கும் மக்களை வாட்டி வதைக்கிறார்கள். அதிகாரம் தரும் தடுமாற்றத்தில் ஓடும் இந்த ஆட்டங்களை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள். அவர்களுக்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என திரு டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |