டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல் 34 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், குவிண்டன் டிக்காக்கும் களமிறங்கினர்.இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் ரோஹித் சர்மா 30 (22) ரன்களிலும், குவிண்டன் டிக்காக்கும் 35 (27) ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு சூர்ய குமார் யாதவ் 27 ரன்களில் வெளியேறினார்.
கடைசியில் அதிரடியாக விளையாடி க்ருணால் பாண்டியா 37* (26) ரன்களும் , ஹர்திக் பாண்டியா 32 (15) ரன்களும் குவித்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழந்து 168 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளும், அமித் மிஸ்ரா, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து 169 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவனும், பிருத்வி ஷாவும் களமிறங்கி சிறப்பான துவக்கம் கொடுத்தனர். பிருத்வி ஷா பொறுமையாக விளையாட ஷிகர் தவன் அதிரடியில் இறங்கினார். அதன் பிறகு ஷிகர் தவன் 35 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் பிருத்வி ஷாவும் 20 ரன்களில் வெளியேற அடுத்து வந்த மன்ரோ 3, ஸ்ரேயாஸ் ஐயர் 3, ரிஷப் பண்ட் 7 என அடுத்ததடுத்து சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
அதன் பிறகு ஓரளவு ஆடிய அக்சர் பட்டேல் 26, மோரிஸ் 11, ரபாடா 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் டெல்லி அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. மும்பை அணியில் அதிகபட்சமாக ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளும், ஜஸ்பிரிட் பும்ரா 2விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா, லசித் மலிங்கா, க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும்வீழ்த்தினர். மும்பை அணி இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.