புதுச்சேரியில் சண்டே மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி காந்தி வீதி சாலையில் கடைகளை அமைத்து வியாபாரிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலம் காந்தி வீதியில் பல ஆண்டுகளாக சண்டே மார்க்கெட் இயங்கி வருகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகளும் கடைகளை போட்டு விற்பனை செய்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக சண்டே மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பல்வேறு வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில்.
சண்டை மார்க்கெட்டையும் திறக்க வலியுறுத்தி சிறு வியாபாரிகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தும் வருகின்றனர். ஆனால் அந்த மார்க்கெட் திறக்கப்பட்டால் ஏராளமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள் என்பதால் முதலமைச்சர் திரு நாராயண சாமி அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் சண்டே மார்க்கெட்டை திறந்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரி 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காந்தி வீதியில் சாலையில் கடைகளை போட்டு விற்பனை செய்யும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் முதல் அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வியாபாரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.