நீட் தேர்விற்கு தேசிய தேர்வு முகமை வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.
நாளை நடைபெற இருக்கும் நீட் தேர்விற்கு தேர்வு முகமை சில நெறிமுறைகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. இவற்றை கட்டாயம் பின் பற்றினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, மாணவர்கள் தேர்வு அறைக்குள் நுழையும் முன்னர், வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும். இந்த பரிசோதனையில் அதிக வெப்பநிலை உள்ள மாணவர்களுக்கு தனி அறையில் தேர்வுகள் நடைபெறும். பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்க இருப்பதால், மாணவர்கள் காலை 11 மணிக்கே தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும்.
மேலும், தேர்வு எழுத வரும் மாணவர்கள் கண்டிப்பாக சானிடைசர் மற்றும் குடிநீர் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். முகக் கவசம் மற்றும் கையுறைகள் தேர்வு மையத்தில் அனைவருக்கும் வழங்கப்படும்.நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்படுவதை தடுக்க, ஆதார் எண், கைரேகை போன்ற விவரங்கள் கட்டாயமாக சோதனை செய்யப்படும். மேலும் இந்த ஆண்டு நீட் தேர்வை நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட 78,058 பேர் அதிகமாக எழுத இருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டை விட 16,724 பேர் குறைவாக எழுத இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.