இந்திய வீரர்கள் எல்லையைத் தாண்டி வந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியா மற்றும் சீனா இடையே சில நாட்களாக எல்லைப் பிரச்சினை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறி செயற்பட்டால் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை குவித்துள்ளன. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் நாளுக்குநாள் பதற்றம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை தாண்டி வந்து இந்திய வீரர்கள் பாங்காங் ஏரி சமவெளிப் பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் தற்போது குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து சீன ராணுவ செய்தியாளர் கூறுகையில், ” எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய ராணுவம் சட்டவிரோதமாக கடந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. சீன ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. அதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு நாங்கள் பதில் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை உண்டாகியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இந்திய ராணுவத்தின் செயல் மிக மோசமான ஆத்திரமூட்டும் செயலாக உள்ளது என சீன ராணுவ விமர்சித்துள்ளது. இத்தகைய ஆபத்தான செயல்களை இந்திய ராணுவம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம் என்றும் கூறியிருக்கிறது.