கொரோனா பெருந்தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள போதிலும் 130 கோடி இந்தியர்களின் லட்சியம் மற்றும் விருப்பங்களில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையென பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-இந்தியா உக்திகள் வகுத்தல் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். மாநாட்டில் பேசிய திரு நரேந்திர மோடி 2020ஆம் ஆண்டு தொடங்கியபோது இந்தாண்டு இது போன்று இருக்கும்மென யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என்றும் கொரோனா பெருந்தொற்று அனைவரையும் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நம்மை சூழ்ந்திருக்கும் முன் எப்போதும் இல்லாத சூழ்நிலை நமக்கு புதிய சிந்தனைகளையும் புதிய வாய்ப்புகளையும் வழங்கி இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவில் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
இந்த கொரோனா தொற்றானது பல்வேறு விஷயங்களை பாதித்த போதிலும், 130 கோடி இந்தியர்களின் விருப்பங்கள் மற்றும் லட்சியங்களில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று பெருமிதத்துடன் கூறினார். மேலும் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும், தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளதாகவும் திரு மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.