நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடாக திகழும் நேபாளத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இல்லை. அங்கு ஊரடங்கு விதிமுறைகளை மக்கள் அனைவரும் கடைபிடித்து வந்த நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. அங்கு நேற்று மட்டும் 1,120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,649 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்ததால், தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேபாளத்தின் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 917 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.