எனது மகளை உதாரணமாகக் கொண்டு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இறந்த மாணவியின் தந்தை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் டி.கலபம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்.. இவரது 17 வயது மகள் ஹரிஷ்மா ஸ்ரீ பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வரவில்லை.. இதனால் வேதனையடைந்த மாணவி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.. அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மாணவியின் தந்தை கணேசன் கூறியதாவது, “ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வரும் எங்களுக்கு நாட்டு நடப்பு கூட சரியாக தெரியாது.. எனது மகள் சிறுவயதில் இருந்தே நன்றாக படிப்பாள்.. எப்படியாவது டாக்டராக வேண்டும் என்று எங்களிடம் சொல்வாள்.. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்த பின்பே நீட் தேர்வுக்கு தயாராக வேண்டுமென தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தாள்.
நீட்தேர்வுக்கு விண்ணப்பம் செய்து ரொம்ப நாட்கள் ஆகியும் ஹால்டிக்கெட் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்.. எனது மகளுடன் படிக்கும் சக மாணவர்களில் சிலருக்கு ஹால் டிக்கெட் வந்துவிட்டது. ஆனால் எனக்கு மட்டும் ஏன் வரவில்லை என மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அழுதுகொண்டே இருந்தாள் எனது மகள்.. மெயில் ஐடியின் பாஸ்வோர்டு மறந்து விட்டதால் எந்த தகவலையும் எங்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.