சீனாவின் வுகான் நகரில் பல மாதங்களுக்குப் பின்னர் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட உடன் சீனாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அதிலும் குறிப்பாக வுகான் நகரில் உள்ள பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன.
அதன்பிறகு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், ஷாங்காய் நகரில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த மே மாதம் மீண்டும் திறக்கப்பட்டன. இருந்தாலும் வுகான் நகரில் உள்ள பள்ளிகள் செயல்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு மேல்நிலைப் பள்ளிகள் மட்டும் திறப்பதற்கு கடந்த மே மாதம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தொடக்கநிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் அங்கு கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், தொடக்க நிலை மற்றும் நடுநிலை உட்பட்ட அனைத்து பள்ளிகளும் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல மாதங்களுக்கு பின்னர் வுகான் நகரில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மொத்தம் 14 லட்சம் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வகுப்புகளில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் பீஜிங் மாகாணத்தில் கொரோனா பரவல் இருந்து கொண்டிருப்பதால் இந்த மாதத்தின் இறுதியில் பள்ளிகளை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.