கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்த 39 தீயணைப்பு வீரர்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் பிளாஸ்மா தானம் செய்தனர்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த மாதம் பிளாஸ்மா வங்கியினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து கொரோனாவிலிருந்து மீண்ட நபர்கள் விருப்பப்பட்டால் பிளாஸ்மா தானம் செய்யலாம் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.
அப்போது அவர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “இதுவரை தமிழகத்தில் 225 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சையானது செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் பிளாஸ்மா தானம் உட்பட அதன் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.
இன்னும் சில தினங்களில் அனைத்து மாவட்டங்களிலும் சிகிச்சைப் பெறும் அளவிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. மேலும் பிளாஸ்மா தானம் அளித்த தீயணைப்பு வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும்” எனத் தெரிவித்தார்.
இதுவரை பிளாஸ்மா வங்கியில் தாமாக முன்வந்து 140 பேர் பிளாஸ்மா தானம் செய்திருக்கின்றனர் . இதன்மூலம் 225 கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.