சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து தமிழக அரசிற்கு எதிராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் இந்நிலையில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளதால் மக்களுக்கு ஓரளவு திருப்தி அடையக் கூடிய சூழல் நிலவி வந்தாலும் அவர்களின் பொருளாதார வாய்ப்பு என்பது குறைந்த அளவிலேயே உள்ளது. இத்தகைய பொருளாதார இழப்பை தமிழக அரசு ஈடுசெய்ய வேண்டும். ஆனால் தற்போது உள்ள சூழலில் மக்களிடம் பணம் பறிப்பதை குறிக்கோளாக வைத்துள்ளது தமிழக அரசு. இவ்வாறு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” எவ்வளவு அடித்தாலும் மக்கள் தாங்குவார்கள் என்ற காரணத்தால் தமிழக அரசு கட்டணங்களை உயர்த்தி பொதுமக்களை முடக்கியுள்ளது. மக்களுக்கு உதவும் அரசு இவ்வாறு நடந்துகொண்டால் மக்களின் நிலைமை என்ன ஆவது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். மேலும் மக்கள் இந்த கொரோனா காலகட்டத்தில் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர். அவர்களிடம் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் உயர்வு இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்த நிலையை அரசு கட்டாயம் மாற்ற வேண்டும் ஒரேடியாக மக்களின் மீது பொருளாதார வேட்டையாடக் கூடாது.
பசியில் வாடும் மனிதனுக்குச் சோறு போடாமல், “கொஞ்ச நேரம் பொறு, உன்னிடம் கொஞ்சம் ரத்தத்தை உறிஞ்சிக் கொள்கிறேன்” என்று இரக்கமில்லாமல் நடந்து கொள்ளக்கூடாது. நகரங்களை நோக்கி வந்து மீண்டும் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் அப்பாவிகளுக்கு அபராதம் போடும் வகையில், சுங்கக் கட்டணக் கொள்ளையைச் செய்யாதீர்கள்! பெட்ரோல், டீசல் விலையைக் குறையுங்கள் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் மாநில அரசும், மக்களுக்குப் பொருளாதார உதவிகள், சலுகைகள் கொடுப்பதன் மூலமாக, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் துன்ப துயரங்களில் தோள் கொடுத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு முகஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.