ஆக்ரா அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவை அடுத்த நாக்லா கிஷன் லால் என்ற பகுதியில் வசித்து வரும் ராம்வீர் என்பவர் மளிகைக் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு மீரா என்ற மனைவி மற்றும் பாப்லூ (23) என்ற மகனும் உள்ளனர்.. இவர்கள் மூவரும் கடைக்கு அருகே வீட்டில் வசித்து வந்தனர். வழக்கமாக, அதிகாலையிலேயே கடையை திறக்கும் ராம்வீர் , அன்று வெகு நேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ராம்வீர் வீட்டுக்குள் எட்டிப்பார்த்த போது தான் மூவரும் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ந்தனர்..
இதனையடுத்து அவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு போன் செய்து தகவலை சொன்னார்கள்.. தகவல் அளித்தன் பேரில் கூடுதல் காவல் தலைவர் அஜய் ஆனந்த், ஐஜி ஏ.சதீஷ் கணேஷ், மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி) பாப்லூ குமார் மற்றும் போலீசார் தடயவியல் குழுவுடன் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அதனைத்தொடர்ந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வாயில் பாலிதீன் பை திணிக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களை மீட்ட போலீசார், உடனே பிரேதசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விசாரணையில், 3 பேரின் கொலை தொடர்பாக சந்தேகம் வராமல் இருப்பதற்கு அவர்களது வீட்டின் கேஸ் சிலிண்டர் டியூப்பை அறுத்து, மூவரையும் வீட்டோடு எரிப்பதற்கு கொலை செய்தவர் திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், அவரது வீட்டுக்கு அருகிலேயே வசித்துவரும் ராம்வீரின் சகோதரரை அழைத்து முதல்கட்ட விசாரணையை நேற்று தொடங்கினர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..