நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நீதி மன்ற செயல்பாடுகள் குறித்து அடுத்தடுத்து இரண்டு ட்விட்களை பதிவிட்டார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பிரசாந்த் பூஷணின் இந்த நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில் அவர் இதில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.
வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷனுக்கு என்ன தண்டனை வழங்கலாம் ? என்பது சம்பந்தமாக விரிவான விவாதங்கள் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் தீர்ப்பானது வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் என்பது விதிக்கப் பட்டிருக்கின்றது. வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் இந்த ஒரு ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும். ஒருவேளை அவர் செலுத்த தவறினால் அவருக்கு மூன்று மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
மேலும் நீதிபதிகள் சில முக்கியமான கருத்துக்களையும் கூறியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களை சந்தித்து… அப்போது தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவுக்கு எதிராக சில முக்கியமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். அது தவறு என தற்போதைய நீதிபதிகள் அமர்வு கருத்து கூறியிருக்கிறார். நிச்சயமாக பத்திரிக்கையாளர்களை நீதிபதிகள் சந்திக்க கூடாது எனவும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்.