Categories
அரசியல்

தமிழக்தில் ஊரடங்கு தளர்வுகள் – எவற்றுக்கெல்லாம் அனுமதி ?

தமிழகத்தில் 5 மாதங்களுக்குப் பின்னர் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி, இ-பாஸ் முறையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பயணிப்பதற்கான இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ- பாஸ் நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஒன்றாம் தேதி முதல் சென்னையில் மாநகரப் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் வரும் 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் இரவு 8 மணி முதல் இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது பார்சல் சேவைகள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுகிறது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள் மற்றும் ஐடி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப் படுகிறது. ஐடி நிறுவனங்கள் அத்தியாவசிய ஊழியர்கள் தவிர பிற பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் இயங்க அனுமதிக்கப் படுகின்றன. பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திறன் மற்றும் தொழிற்பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது. திரைப்பட படப்பிடிப்புக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 75 நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என்றும், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூற பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கிடையேயான ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தளங்களில் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 50 சதவீத வெளிமாநில விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு தொடரும் என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |