மக்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைக்கு தவணை செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா காலகட்டங்களில் பொருளாதாரம் என்பது மிகவும் சரிவடைந்து வருகின்ற நிலையில், மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் பெற்றிருக்கும் கடன் தொகைக்கு தவணை முறையை நீட்டிக்க வேண்டும் என ஏற்கனவே வைத்த கோரிக்கையில் அரசு அவகாசம் கொடுத்திருந்தது. அந்த அவகாசம் ஆகஸ்ட் 31 ல் நிறைவடைய உள்ளது. அதனால் தற்பொழுது மீண்டும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வங்கிகளில் கடனுக்கான தவணைத் தொகையை திருப்பி செலுத்த ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கொரோனா கால ஊரடங்கையும் தாண்டி ஒவ்வொருவரின் கைகளில் இருக்க வேண்டிய ‘ரொக்கப் பணம்’ அல்லது ‘வருமானம்’ என்ற நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும் இதை மனதில் வைத்துக்கொண்டு, வட்டித் தொகை, அபராத வட்டி போன்றவற்றை மக்களிடம் வசூலிக்காமல், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கு முன்வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.