பொது முடக்கம் நீட்டிக்கப்படுவது தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் என்பது நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தளர்வுகளை பொறுத்தவரை பார்த்தோமென்றால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கிறது. அதனை ரத்து செய்வதற்கு தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அதேபோல பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பான ஒரு முடிவும் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக விவாதிப்பதற்காக தான் மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர்களிடம் தமிழக முதலமைச்சர் நேற்று ஆலோசனை மேற்கொண்டு இருந்தார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்த நடைமுறையை ரத்து செய்து பொது போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு விதமான முடிவுகள் எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை வெளியிடுவார் என்று சொல்லப்படுகின்றது.
செப்டம்பர் மாதத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு என்பது பொது மக்கள் மத்தியிலே தொடர்ச்சியாக இருந்து வந்தது. வழிபாட்டுத் தலங்களை திறப்பது, அத்தியாவசிய கடைகள் உள்ளிட்டவைகளின் நேரத்தை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வணிகர்களின் கோரிக்கையாக வைத்திருந்தார்கள். அது தொடர்பாகவும் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அதற்கான முடிவுகளும் எடுக்கப்பட்டன. மத்திய அரசை பொறுத்தவரை நேற்று நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கின்றார்கள்.