கொரோனா ஊரடங்காள் இன்னும் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், தங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை விவசாய பூமியாகவே மாற்றியுள்ளது தனியார் பள்ளி ஒன்று.
விவசாயத்தை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் தனியார் பள்ளி ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் அடுத்துள்ள வீரபாண்டி பிரிவில் அமைந்துள்ளது இந்த பள்ளி. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பள்ளி வளாகத்தில் விவசாயம் செய்துவரும் ஆசிரியர்கள் தற்போது ஊரடங்கை பயன்படுத்தி பள்ளியின் விளையாட்டு மைதானத்தை விவசாய பூமியாக மாற்றி உள்ளனர். ஆன்லைன் வகுப்புகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் விவசாயத்தை கையில் எடுத்து அசத்தி வருகின்றனர் ஆசிரியர்கள். பள்ளியின் விளையாட்டு மைதானம் பள்ளி மாடிக்கட்டிடம் உள்ளிட்டவைகளில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
விளையாட்டு மைதானத்தை உழுது, வேர்க்கடலை, சூரியகாந்தி, மக்காச்சோளம், தட்டைப்பயிறு, வெள்ளரி, வென்டை, மஞ்சள் மற்றும் சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் போடப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்து பள்ளி திரந்தவுடன் மீண்டும் விவசாய நிலத்தை விளையாட்டு மைதானமாக மாற்றி விடுவோம் என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர். நாட்டு விதைகளை பாதுகாக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றும் அவர் கூறுகிறார்.