மனைவி கீழே விழுந்தது கூட தெரியாமல் பைக் ஓட்டிச் சென்ற கணவனை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய பாளையத்தில் விவசாய வேலை பார்த்து வருபவர் 47 வயதான சோலைமுத்து. இவரின் மனைவி ரேணுகா(38). இந்த தம்பதியினருக்கு 18 வயதான கார்த்திக் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் கார்த்திக்கின் பாட்டி நேற்று கீழே விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லுமாறு சொல்லிவிட்டு தன் மனைவி ரேணுகாவை கூட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வெளியே கிளம்பினார் சோலைமுத்து.
அப்போது பெட்ரோல் போட வேண்டும் என்று காவல் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்தியபோது பின்னால் திரும்பி பார்த்துள்ளார். அப்போது உட்கார்ந்திருந்த மனைவியை காணவில்லை என்று அதிர்ச்சியான சோலைமுத்து தன்னுடைய மகனை போன் போட்டு அழைத்து இருவரும் தேடி பார்த்தனர். ரேணுகா எங்கும் கிடைக்காததால் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் உடனடியாக எருமப்பட்டி பவித்திரம் செல்லும் வழியில் சென்று சோலை துறை மனைவியை தேடி பார்த்தனர்.
அப்போது பொன்னேரி என்ற இடத்தில் உள்ள வேகத்தடை அருகே ரேணுகா தனியாக நின்று கொண்டிருந்தார். அவரிடம் மேற்கொண்டு விசாரித்தபோது, வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது தவறி விழுந்து விட்டதாகவும், கணவர் தன்னை கவனிக்காமல் சென்று விட்டதாகவும், அவர் கூறினார். அதன்பின் அங்கிருந்து ரேணுகாவை அழைத்துக்கொண்டு சோலைமுத்துவிடம் போலீசார் சேர்த்தனர். மனைவி தவறி விழுந்தது கூட தெரியாமல் பைக் ஓட்டி விட்டு போலீசாரை கலவரமாக்கிய சோலைமுத்துவை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.