மெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றது. அதனை தொடர்ந்து மெக்சிகோ பலி எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. மெக்சிகோவில் ஒரே நாளில் மட்டும் 6,482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,56,216 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரே நாளில் 644 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 60,254 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோய் அறிவியல் துறை இயக்குனர் அனா லூசியா கூறுகையில், ” கடந்த வாரம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அதேபோன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.