Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இந்த வருடத்திற்குள் கொரோனா தடுப்பூசி தயார்… மத்திய சுகாதாரத்துறை மந்திரி…!!!

இந்தியா கொரோனா தடுப்பூசியை இந்த வருடத்தின் இறுதிக்குள் உருவாக்கும் என நம்பிக்கை இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பாக ரஷ்யா, தாங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டு தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மூன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை கண்டறிந்து, மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் தற்போது ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியை இந்த வருடத்தின் இறுதிக்குள் உருவாக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ” இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.87 சதவீதமாக இருக்கின்றது.

அது மிகவும் குறைவான இறப்பு விகிதம் ஆகும். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 70 சதவீதமாக இருக்கின்றது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிக சிறப்பான சதவீதமாக உள்ளது. அது மட்டுமன்றி இந்தியா முழுவதும் 1,500 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய சாதனையாக உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பொறுத்தவரையில் நம்மிடம் இருக்கின்ற தடுப்பூசிகளில் ஒன்று மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் மூன்றாம் கட்டத்தில் இருக்கின்றது. அந்த தடுப்பூசி இந்த வருடத்தின் இறுதிக்குள் உருவாக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |