மாங்கரை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ, வேகமாக பரவியதால் அரியவகை மூலிகைகள்,உள்ளீட்ட ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
கோயமுத்தூர் மாவட்டம் மாங்கரை அடுத்துள்ள காளப்ப நாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமானதால் காட்டு தீ அங்கிருந்து மருதமலை எல்லை பகுதி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மளமளவென பரவியது. இத்தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரம் என்பதால் தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்ட நிலையில், மருதமலை பகுதியில் மட்டும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர நீண்ட நேரம் போராடினர். மேலும் காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என வனத்துறையினர் கூறியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறையினர் தீ ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் இந்த காட்டு தீயில் அரியவகை மூலிகைகள், உள்ளீட்ட ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாகின.