பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் அனுப்பியதற்கு சுரேஷ் ரெய்னா நன்றி தெரிவித்துள்ளார்.
தோனி மற்றும் ரெய்னா ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தை அடுத்து தங்களது ஓய்வை அறிவித்தனர். அதில் தோனி தனது 39 வயதில் ஓய்வு அறிவித்துள்ளார். ஆனால் சுரேஷ் ரெய்னா 33 வயதில் ஓய்வு அறிவித்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவருக்கும் கிரிக்கெட் உலகம் மட்டுமல்லாமல் பல்வேறு துறையை சேர்ந்த அனைவரும் பிரியாவிடை வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தோனியை பாராட்டி கடிதம் எழுதியுள்ள பிரதமர் மோடி, அவரை புதிய இந்தியாவின் உத்வேகத்தின் எடுத்துக்காட்டு என்று பாராட்டியுள்ளார்.
அதனைப்போலவே சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், “கிரிக்கெட் விளையாட்டுக்காகவே வாழ்ந்தீர்கள், அதனையே உயிர் மூச்சாக கொண்டுள்ளீர்கள். நீங்கள் உங்கள் வாழ்வின் கடினமான முடிவை எடுத்துள்ளீர்கள். அதனை ஓய்வு என்று ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன். இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டியதற்கும், விளையாட்டில் இந்தியாவை முன்னணிப்படுத்த முயன்றதற்கு நான் உங்களுக்கு மிகுந்த நன்றி தெரிவிக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” நாங்கள் விளையாட்டில் களம் இறங்கும் போது நாட்டிற்காக ரத்தத்தையும் வியர்வையையும் சிந்திக்கின்றோம். இந்த நாட்டு மக்களின் அன்பைப் போல் சிறந்த பாராட்டு வேறு எதுவும் இல்லை. அதிலும் நாட்டின் பிரதமரே அன்பு காட்டும் போது எனக்கு வேறென்ன வேண்டும். பிரதமருக்கு நன்றி தெரிவித்து உங்கள் பாராட்டை நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.