Categories
உலக செய்திகள்

மாலியில் ராணுவ புரட்சி… நாடாளுமன்றம் கலைப்பு….. அதிபர் ராஜினாமா…..!!

மாலி நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் பயங்கரவாதத்தை ஒழிக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் கூறி கடந்த 2 மாதங்களாக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலி  இராணுவத்தினரின் ஒரு பிரிவினர் திடீரென கிளர்ச்சியாளர்களாக உருமாறி புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் பமாகோவை ஆக்கிரமித்த கிளர்ச்சி ராணுவ வீரர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டு வந்தனர். அதுமட்டுமன்றி ராணுவ டாங்கிகள் மூலமாக நகரத்தில் வலம் வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கிளர்ச்சி ராணுவ வீரர்கள், அரசு அலுவலகங்களில் புகுந்து அரசு ஊழியர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதனால் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து தப்பிச் சென்றனர். அதுமட்டுமன்றி அரசுக்கு ஆதரவான ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆங்காங்கே தடுத்து வைக்கப்பட்டனர். அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கிளர்ச்சி ராணுவ வீரர்களின் செயல்களை உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவிகளை செய்துள்ளனர். திடீர் ராணுவ புரட்சியால் பமாகோ பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. நிலைமை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து, கிளர்ச்சி ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி பிரதமர் மெய்கா பவ்பவ் சிஸ்சே அழைத்துள்ளார்.

ஆனால் அதில் எந்தவித பயனும் இல்லாமல், கிளர்ச்சி ராணுவ வீரர்கள் அந்நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை இல்லத்தைச் சுற்றி வளைத்து, துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அதன் மூலம் மாலியில் ஆட்சியை முழுவதுமாக ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இராணுவத்தினரின் பிடியில் இருக்கின்ற அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் நேற்று தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். அந்த உரையில், ” நான் உடனடியாக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். ராஜினாமா அமுலுக்கு வருகின்றது. நாடாளுமன்றமும் கலைக்கப்படுகின்றது” என்று அவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சதி திட்டத்தால் அதிபரை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாக மாலி ராணுவ வீரர்களுக்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மேலும் மக்களின் புரட்சிக்கான தேசிய குழு என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் கிளர்ச்சி ராணுவ வீரர்கள் மாலியில் ஜனநாயக ரீதியில் புதிய தேர்தல் நடத்த வேண்டும் என உறுதியளித்துள்ளனர். மக்களின் புரட்சிக்கான தேசியக் குழுவின் தலைவரும், இராணுவ அதிகாரியுமான இஸ்மாயில் வாகு இதுகுறித்து கூறுகையில், ” உங்களுடன் ஒன்றாக நின்று இந்த நாட்டை அதன் முந்தைய மகத்துவத்துக்கு மீட்டெடுக்க முடியும். நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |