ஜம்மு – காஷ்மீரில் இரண்டு மாவட்டங்களுக்கு அதிவேக 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் காந்தர்பல் மற்றும் உத்தம்பூர் மாவட்டங்களில் 4ஜி அதிவேக இணைய சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மருத்துவ சேவை மற்றும் கல்விக்காக 4ஜி இணைய சேவை வழங்கவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இது பற்றி விரைவில் முடிவு எடுக்க உயர்நிலைக்குழு அமைப்பதற்கு உத்தரவிட்டது. அதனை செயல்படுத்த வில்லை என்று கூறி ‘பவுண்டேஷன் பார் மீடியா ப்ரொபஷனல்’ என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசிற்கு எதிராக அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஜம்முவில் ஒரு மாவட்டத்திலும், காஷ்மீரில் ஒரு மாவட்டத்திலும் 4ஜி இணைய சேவை வழங்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள உதாம்பூர் மாவட்டம், ஜம்முவில் உள்ள காந்தர் பால் மாவட்டத்தில் மட்டும் நேற்று இரவு முதல் 4ஜி சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு சேவை வருகின்ற செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி வரையில் பரிசோதனை முயற்சியாக வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் உத்தரவை திரும்பப் பெறப்படும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கூறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி ரத்து செய்வதற்கு முதல் நாள் இரவு மாநிலம் முழுவதும் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஜனவரி 25ஆம் தேதி 2ஜி இன்டர்நெட் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரு ஆண்டிற்குப் பின்னர் தற்போது இரு மாவட்டங்களுக்கு 4 ஜிஅதிவேக இன்டர்நெட் இணைப்பு வழங்கப்பட்டிருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த உத்தரவு நேற்று இரவு 9 மணி முதல் அமலுக்கு வந்தது.