சொத்துக்காக தங்கையை கொன்று விட்டு பெற்றோரையும் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் 48 வயதான பென்னி. இவரின் மனைவி பெஸ்ஸி. இந்த தம்பதியினருக்கு ஆல்பின் (22), ஆன்மேரி (16) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். ஆல்பின் என்பவர் தமிழ்நாட்டில் உள்ள கம்பம் பகுதியில் ஐ.டி.ஐ. படித்து வருகிறார். கொரோனா காரணமாக தற்போது காசர்கோட்டில் உள்ள குடும்பத்தினருடன் சொந்த ஊரில் தங்கியுள்ளார். அப்போது, குடும்ப சொத்து முழுவதையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை ஆல்பினுக்கு வந்துள்ளது. இந்த ஆசை, அவரது குடும்பத்தையே தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற கொடூர மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், போலீசாரிடம் மாட்டிக் கொள்ளக்கூடாது என முடிவெடுத்துள்ளார்.
அதனால் அவர் ஒரு சதித்திட்டம் தீட்டி. சென்ற 10 நாட்களுக்கு முன் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து தனது சகோதரி ஆன்மேரி மற்றும் பெற்றோருக்கு கொடுத்துள்ளார். ஐஸ்க்ரீமை சகோதரி அதிகம் சாப்பிட்டதாகவும், பெற்றோர் குறைவாக சாப்பிட்டதாகவும் தெரிகிறது. மறுநாள் தங்கை ஆன்மேரி வயிற்றுவலியால் அலறி உள்ளார். உடனே அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே ஆல்பின் பெற்றோருக்கும் உடல்நலம் சரி இல்லாமல் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனில்லாமல் ஆன்மேரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரித்த போலீசார், விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் தான் ஆன்மேரி இறந்ததாகவும், அவருடைய பெற்றோரும் பாதிக்கப்பட்டதாகவும் கண்டறிந்தனர். உடனே, ஆல்பினை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில், சொத்துக்காக ஐஸ்கிரீமில் விஷம் கலந்து தங்கையை கொன்றதை ஒப்புக் கொண்டார் ஆல்பின். பெற்றோரை கொல்லும் திட்டம் தோல்வியில் முடிவடைந்ததையும் தெரிவித்தார். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்பினை கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.