அதிநவீன நெட்வொர்க் ஆன 4g சேவை சோதனை அடிப்படையில் வழங்கப்படுமென மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சென்ற வருடம் லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அதிவேக இன்டர்நெட் சேவையான 4ஜி நிறுத்தப்பட்டது. சென்ற 7-ஆம் தேதி இது குறித்த விசாரணையில் மீண்டும் 4ஜி சேவை வழங்குவதற்கான இடங்களை ஆய்வு செய்ய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் மத்திய அரசு, ஒரு குழு அமைத்து எங்கெல்லாம் 4ஜி நெட்வொர்க் சேவை வழங்கலாம் என்பதை ஆராய்ந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமை வகிக்க, ஆர் சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறுகையில், ‘‘மத்திய அரசு அமைத்துள்ள குழு பரிசோதனை அடிப்படையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் டிவிசனில் தலா ஒரு மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் 4ஜி இன்டர்நெட் சேவை வழங்க முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 15-ந்தேதிக்குப்பின் இந்த சேவை வழங்கப்படும்’’ என்று அவர் அறிவித்துள்ளார். மேலும் இது பற்றி ஆர் சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோர் கூறுகையில், ‘‘மத்திய மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் இந்த முடிவு ஒரு நல்ல நிலைப்பாடு’’ என்று கூறினர்.