திருமண மேடையை அமைப்பதற்காக லட்சக்கணக்கில் முதலீடு போட்டு வாங்கிய அலங்கார பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது ஊரடங்கு. திருமண மேடையை அமைப்புவர்களை ஊரடங்கு எப்படி பாதித்து இருக்கிறது என விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
சமூக இடைவெளி திருமணம் இன்று இல்லை தற்காலிக திருமணம் மேடையாக மாறி வேன்களிலும், பாலங்களிலும் கூட வினோதமான திருமண முறைகளைக் கொரோனா காலம் கண்முன்னே காட்டிக்கொண்டிருக்கிறது. அரசின் கட்டுப்பாடுகளால் ஆயிரம் உறவுகள் சூழ்ந்திருந்தது வாழ்த்துவது, பந்தி பரிமாறுவது, ஆட்டம் கொண்டாட்டம் என்று நடந்த திருமணங்கள் மாறிவிட்டதால், சமையல் கலைஞர்கள் முதல் திருமண அலங்கார மேடை அமைப்பவர்கள் வரை வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு ஆண்டுகளாக திருமண அலங்கார மேடை, பந்தல் போடும் தொழில் செய்து வந்த ஆண்டனி, கொரோனாவுக்கு முன்புதான் 5 லட்சம் முதலீடு போட்டு புதிய பொருட்களை வாங்கி இருக்கிறார். நான்கு மாதங்களாக ஊரடங்கு வந்துவிட்டதால் ஆடம்பர திருமணங்கள் இல்லை மண்டபங்களும் பூட்டியே கிடக்கின்றன.
இதனால் வருமானம் இழந்தவர் குடோன் வாடகை செலுத்த முடியவில்லை என்று ஆதங்கப்படுகிறார். நான்கு மாதங்களாக முன்புபோல திருமணங்கள் இல்லை. இதனால் திருமண மேடைகளில் இருக்கவேண்டிய வாழ்வு கொடுத்து வந்த அலங்காரத் தூண்கள், யானை முகங்கள், கடவுள் உருவங்கள் அனைத்தும் சாலையோரம் கிடைகின்றன. ஆகஸ்ட் 15-ம் தேதியோடு ஆடிமாதம் முடிக்கிறது. அதன்பிறகு விதிமுறை தளர்வுகளுடன், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி தந்தால் மட்டுமே திருமணங்களை சார்ந்து இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிழைக்க வழி பிறக்கும். திருவிழா போல நடக்கும் திருமணங்களை நம்பி, லட்சக்கணக்கில் முதலீடு போட்டு வாங்கிய மேடை அலங்கார பொருட்கள் மீண்டும் மேடை ஏறும் நாள் எப்போது வரும் என்று கலக்கத்தில் இருக்கின்றனர் இவர்கள்.