கள்ளக்குறிச்சியில் ஒரே மரத்தில் ஒரே கல்லூரியைச் சேர்ந்த மாணவனும் மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வருபவர் கவிதா. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ பட்டப்படிப்பை படித்து வந்துள்ளார். இறுதியாண்டு படித்து வந்த இவர் ஊரடங்கு காரணமாக கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் தேர்வுக்காக காத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று தனது பெற்றோர்களிடம் அருகே உள்ள கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். வெளியே சென்றவர் பின் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
அவரை பெற்றோர்கள் ஊர் முழுவதும் தேடித் திரிந்தனர். இந்நிலையில் ஊருக்கு வெளிப்புறமாக அமைந்துள்ள அம்மன் கோவில் எதிரே கவிதாவும் மற்றொரு இளைஞரும் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடப்பதாக அவரது பெற்றோருக்கும் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், கவிதாவுடன் தூக்கில் தொங்கி இருந்த இளைஞன், அவருடன் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் படித்து வந்தவர் என்பது தெரியவந்ததுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் காதல் பிரச்சனையால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா ? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.